Thursday, 3 November 2011

என் வசந்தகால தமிழ்சினிமாக்களும் நானும்



80ம் ஆண்டு பிறந்தவன் நான் அதனால் 80களில் வெளிவந்து இருந்த பல சினிமாக்களில் மனதை
தொலைத்தவன் நான்.சமீபத்தில் வந்தான்வென்றான் என்ற படத்தை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.இந்தியதொலைக்காட்சிகளில் முதன்முறையாக என்று
ஆரம்பித்த படங்கள் படிப்படியாக திரைக்குவந்து சில வருடமே ஆன,மாதமே ஆன,வாரமே ஆன‌
என்ற ரீதியில் வரத்தொடங்கிவிட்டன மேலும் திருட்டு விசிடி வரவு,இணையத்தில் படம் வந்த சில நாட்களிலே டவுன்லோட் செய்யும் வசதி என தற்காலத்தில் படம் பார்க்கும் வசதி அதிகமாகிவிட்டது.ஆனால் 80களில் அப்படியில்லை தூர்தர்ஷன் ஓரளவுக்கு மக்களை கவர்ந்திருந்த நேரம் தற்போது வீட்டுக்கு வீடு முன்னாள் முதலமைச்சரின் தயவால் வண்ணத்தொலைக்காட்சிபெட்டி உள்ளது .அப்போதெல்லாம் ப்ளாக் அண்ட் ஒயிட் டிவி வாங்கவே ஓரளவிற்கு வசதியுள்ளவர்களால் மட்டுமே வாங்க முடியும்.நான் பிறந்து வளர்ந்தது இராமநாதபுரம் அருகிலுள்ள திருப்புல்லாணி என்ற கிராமம் அங்கே ஒரு சிலர் வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.வெள்ளிக்கிழமை ஆகி விட்டால் இரவு 7.30 எப்பொழுது வரும் என்று நினைத்துக்கொண்டிருப்பேன் ஏனென்றால்தூர்தர்ஷனில் ஓளியும் ஒலியும் என்ற நிகழ்ச்சியை தற்போது 30 வயதை கடந்த யாருக்கும் நினைவிருக்கும் அந்த நிகழ்ச்சிக்கு அந்தகாலகட்டத்தில் அப்படி ஒரு மாஸ்.அந்த நிகழ்ச்சியில் புதுப்பாடல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும் .பல்லுப்போன‌
பாட்டி,தாத்தாவிலிருந்து சிறுவர்கள்,பெரியவர்கள்,என வயது வித்தியாசமில்லாமல் பார்க்கும்
நிகழ்ச்சி அது ஏனென்றால் டி.வி என்பது மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்திய காலம் அது.பாட்டுக்கே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் படத்திற்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா
தற்போது வருவது போல விளம்பர இடை வேளைக்கு பிறகு என்ற ரீதியில் விளம்பரங்கள் வராது நிகழ்ச்சிக்கு முன்பே அனைத்து விளம்பரங்களும் வந்து விடும் எந்த ஒரு நிகழ்ச்சியும் தடங்கள் இல்லாமல் ஒளிபரப்பாகும் 5.30க்கு ஒளிபரப்பாகும் படத்திற்க்கு 5மணிக்கே டி.வி இருக்கும் பக்கத்து வீடுகளுக்கு குடும்பசகிதம் ஆஜராகிவிடுவதுண்டு.கூடவே படம் பார்க்கும்போது கொறிப்பதற்க்கு கடலை.முறுக்கு என பல அயிட்டங்களை கொண்டு செல்லவும்
தவறுவதில்லை அந்தக்காலக்கட்டத்தில் வந்த குருசிஷ்யன்,மனதில் உறுதி வேண்டும்,உன்னால்
முடியும் தம்பி,வசந்தராகம்,வீடு,புதியபாதை,வேலைக்காரன்,தர்மம் தலைகாக்கும்,சாரங்கதாரா
புதையல்,என்று அந்தக்காலக்கட்டத்தில் ஒளிபரப்பான படங்களை நான் ரசித்துப்பார்த்ததை சொல்ல இந்த ஒரு பதிவு பத்தாது.

இது மட்டுமல்லாமல் புதன் கிழமை சித்ரகார் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அதில் எல்லாமாநில பாடல்களும் ஒளிபரப்பாகும் அதில் ஒளிபரப்பாகும் ஒரே ஒரு தமிழ்ப்பாடலை
பார்ப்பதற்க்கு மணிக்கணக்கில் உட்காருவதுண்டு.சுப்ரமணியபுரம் படத்தில் இது போன்ற காட்சிகள் மிக நேர்த்தியாக அமைக்கப்படிருக்கும்.




அப்பொழுதெல்லாம் மிகப்பெரும் செல்வந்தர்கள் வீட்டில் மட்டும் தான் விசிஆர் இருக்கும்
தற்போது மார்க்கெட்டில் ஆயிரத்துக்கும் ஐநூறுக்கும் சைனா பொருட்கள்தான் சாதாரணமாக‌
கிடைக்கின்றனவே எப்பொழுதாவதுதேவக்கோட்டையில் உள்ள‌ என் பாட்டி வீட்டுக்கு பள்ளி விடுமுறைக்கு சென்று இருக்கும்போது பக்கத்தில் உள்ள ஒரு செல்வந்தர் ஒருவர் வீட்டில் விசீஆர் ல் படம் பார்ப்பதுண்டு.அப்பொழுது வெளிவந்த மலையூர் மம்பட்டியான்,நட்பு,விக்ரம்
சின்னதம்பி பெரியதம்பி,சின்னவீடு,என்று பலமுறை ரசித்துப்பார்த்த படங்கள்
என்னதான் இவற்றில் படங்கள் பார்த்தாலும் சிறு வயதில் திரையரங்குகளில் என் பாட்டி அம்மா
இவர்களோடு பார்த்த. வருஷம்16,புதுவசந்தம்,சிந்துபைரவி,புதுபுதுஅர்த்தங்கள்,கரகாட்டக்காரன்,விதி, என் தங்கை கல்யாணி,போன்ற படங்கள் என் மனதில் டென்ட் அடித்து இன்றுவரை தங்கியிருக்கும் படங்கள்
அதிலும் குறிப்பாக வருஷம் 16 படம் சிறந்த்தொரு காதல் குடும்ப சித்திரமாக அமைந்து இருந்தது
அன்றிலிருந்து இன்று வரை பலமுறை ரசித்து பார்த்த படம் சிறந்த பாடல்களும்,இசைஞானி இளையராஜாவின் சிறந்தபின்னணி இசையும் பாசிலின் இயக்கமும் கார்த்திக்,குஷ்புவின் நடிப்பும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடக்கூடிய ஒன்றா.அதேபோல அறிமுக இயக்குனர் விக்ரமனின் புதுவசந்தம் மிக மிக நாகரீகமான குடும்பத்தோடுஅனைவரும் பார்க்கும் படம் எஸ்.ஏ ராஜ்குமாரின் முதன் முதலா வரும் பாட்டு.ஆயிரம் திருநாள் பூமியில்வரலாம்,போடு தாளம் போடு போன்ற பாடல்கள் அந்நாட்களில் அனேக கல்யாண வீடுகளில் ஒலித்த பாடல்கள்
அதேபோல‌ 485 நாட்கள் ஓடி வெற்றிவாகை சூடிய கரகாட்டக்காரன் என்ற கலகலப்பான படமும்
அதில் வரும் நகைச்சுவை காட்சிகளும் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவை,மிகச்சூடான கோர்ட்
விவாதம் கொண்ட விதி போன்ற படங்களும்,பாலச்சந்தரின் இயக்கத்திற்காகவும் இளையராஜாவின் மிகச்சிறந்த பாடல்களுக்காகவும் ஓடிய சிந்துபைரவி,புதுபுதுஅர்த்தங்கள் போன்ற படங்கள் பாடல்களுக்காக நான் பலமுறை பார்த்த படங்கள் ஆகும்


அது ஒரு அழகிய நிலாக்காலம் அப்படியொரு காலம் மீண்டும் வரவா போகிறது?

1 comment:

  1. என் இளமைப் பருவத்திற்கே என்னை மீண்டும் கூட்டிச் சென்று மகிழ்வில் திளைக்க வைத்த உங்களுக்கு நன்றிகள் பல. கடைசி வரியில் சொன்னது போல் அந்த நிலாக்காலம் மீண்டும் வருமா...

    ReplyDelete