Thursday 29 March 2012

சினிமாவுக்காக நான் வாங்கிய அடிகளும் வேதனைகளும்

இதைப்படித்து விட்டு யாரும் தப்பாக நினைத்து விடாதீர்கள் சினிமா எடுக்க நான் ஒன்றும் கஷ்டப்படவில்லை சினிமா வாய்ப்புக்காக அலையவில்லை கம்பெனி கம்பெனியாக சினிமா வாய்ப்புத்தாருங்கள் என்று கேட்கவில்லை.சிறு வயதில் இருந்து எப்படியெல்லாம் அப்பா அம்மாவிடமும் வாத்தியாரிடமும் பள்ளிக்கு கட் அடித்தும் சினிமா பார்த்து இன்று உருப்படாமல்
இருப்பதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவே இந்த பதிவு[அவசியம்  இந்த கேவலமான வரலாற எல்லாரும் படிச்சுதான் ஆகணுமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது]

காட்சி 1

அது 1982ம் ஆண்டு மதுரை மிட்லண்ட் திரையரங்கில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது
படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களை அது எரிச்சலில் ஆழ்த்துகிறது.ஏம்மா சின்னப்பையனெல்லாம் தூக்கிட்டு சினிமா பார்க்க வரீங்க என்று பலர் கேட்டு உறவினர் வீட்டுக்கு சென்று உறவினர்களோடு படம் பார்க்க சென்ற என் அம்மாவுக்கு எரிச்சலை கொடுத்தது என் அம்மாவின் படம் பார்க்க வேண்டும் என்ற கனவில் ஒரு பிடி மண்ணை அள்ளிப்போட்டேன். என் கத்தல் கதறல் தாங்கமுடியாமல் அம்மாவும் வெளியே வந்தார் என்னை தூக்கி கொண்டு கோபத்தில் இரண்டு அடி அடித்தார் சினிமா பார்க்க கூடாது என்று அழுததற்காக‌நான் வாங்கிய‌
முதல் அடி அது.பின்னாட்களில் சினிமாவாக அதிகம் பார்த்து கெட்டுப்போகப்போகிறான் என்பதை அறியாமல் அடித்த அம்மாவின் முதல் சினிமா அடி அது.பின்னாளில் மிட்லண்ட் தியேட்டரில் இந்தப்படத்தை பார்க்காமல் அழுதிருக்கிறோமே என்று வருத்தப்பட்டிருக்கிறேன்
அது அப்படி என்னதான் படம் என்று நீங்கள் கேட்பது காதில் கேட்கிறது.மோகன் நடித்து இசைஞானியின் இசையில் ஆர்.சுந்தர்ராஜனின் இயக்கத்தில் வந்த பயணங்கள் முடிவதில்லை என்ற வெற்றிப்படத்தைத்தான் நான் யாரையும் பார்க்க விடாமல் செய்திருக்கிறேன்.அறியாத பையன் தெரியாம செஞ்சிட்டேன் அப்ப எனக்கு ஒரு வயதுதான் ஆனது.


காட்சி 2

இப்ப வருஷம் 1988 .எனது ஊர் ராமநாதபுரம் அருகேயுள்ள திருப்புல்லாணி என்ற சிறிய கிராமம்
மாலையில் பள்ளி விட்டு வந்து ஹோம் வொர்க்கை செய்யாமல் பாக்யராஜ் நடித்த தூறல் நின்னுப்போச்சு படத்தை எங்கள் ஊரில் மிகப்பழமையான டெண்டுகொட்டகை என்று சொல்லக்கூடிய தங்கவேல் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று ஒரே முரண்டு பிடித்தேன்
கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து நாலைந்து அடிவைத்தார்கள் வீட்டில்.அதையும் மீறி அந்த படத்தை பார்த்து விட்டு வந்தவுடன் தான் என் மனம் நிம்மதி அடைந்தது.படம் பார்ப்பதற்க்கு பைத்தியம் பிடித்து அலைந்தகாலம் அது.

காட்சி 3 வருடம் 1989

இந்தமுறை தியேட்டரெல்லாம் கிடையாது.அந்நாட்களில் பக்கத்து வீடுகளில் ஒரு விசிஆர் ஐ வாடகைக்கு எடுத்துவந்து நாலைந்துபடம் போடுவார்கள்.அன்று விடுமுறை நாள் சரி இன்னைக்கு புள்ள படம் பார்த்துட்டுபோகட்டும்னு விட்டாங்க பக்கத்து வீட்டில் காலையில் ஆரம்பித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு 11 மணிக்கு முடிந்தது.அது முடிந்தவுடன் கார்த்திக் நடித்த என் ஜீவன் பாடுது.அதுவும் 1.30க்கு முடிஞ்சது.சிறிது உணவு இடைவேளை மீண்டும் இரண்டு மணிக்கு கலைஞரின் பாசப்பறவைகள் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் லட்சுமியும் ராதிகாவும் அனல்பறக்க வாதாடிகொண்டிருக்கிறார்கள் சிவக்குமார் நான் நான் நானே கொன்னேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துகொண்டிருக்கிறார்.இந்த நேரத்தில் வீட்டிலிருந்து அம்மா டேய் டியூசனுக்கு நேரமாச்சு ஓடிவா என்கிறார்கள்.நான் வழக்கம்போல முடியாது என்கிறேன் இந்தமுறை எனக்கு துணைக்கு
என் தம்பியும் சேர்ந்துகொள்கிறான்.பாசப்பறவைகள் படமும் முடிந்துவிட்டது.அடுத்ததாக ராமராஜன் நடித்த என்னப்பெத்த ராசா காத்துக்கொண்டிருக்கிறது.படம் பார்க்கவேண்டும் என்ற நினைப்பை அம்மா இப்படி வந்துகெடுக்கலாமா என்று மனதிற்க்குள் நினைத்துக்கொண்டு அழுது அடம்பிடித்தேன் என் அம்மா வீட்டு வாசலில் வைத்து அடி வெளுக்கிறார்கள்.என் தம்பியும் என்னுடன் சேர்ந்து அடி வாங்குகிறான்.ஒரு வழியாக டியூசனுக்குத்தான் சென்றோம்.

காட்சி 4    1990 லிருந்து 91 வரை

அது 1990ம் ஆண்டு நான் ஐந்தாம் வகுப்பு படித்துகொண்டிருக்கிறேன்.அந்த நேரத்தில் தினத்தந்தி வெள்ளிமலரில் பிரசாந்த் என்ற புதுமுகம் நடிக்கும் வைகாசிபொறந்தாச்சு என்ற படத்தின் ஸ்டில்கள் அதில் வந்திருந்தன.சில நாட்களில் படமும் ரிலீசானது படம் மகத்தான வெற்றிபெற்றது என்னுடன் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் எல்லாம் ஒரு ஞாயிற்றுகிழமை விடுமுறையில் இந்தப்படத்தை பார்த்துவிட்டுவந்து பீற்றிக்கொண்டிருந்தனர்.என்னை எங்கள் வீட்டில் கூட்டிச்செல்லவில்லை இந்த வருத்தம் எனக்குள் இருந்தது.சரியாக இரண்டு மாதம் கழித்து 1991 மே மாதம் ஆண்டுத்தேர்வு விடுமுறை வந்தது .நான் வழக்கம்போல விடுமுறைக்கு என் பாட்டி வீட்டுக்குசென்றேன் என் பாட்டியின் வீடு காரைக்குடி அருகில் தேவக்கோட்டையில் உள்ளது .அங்கு சரஸ்வதி என்ற திரையரங்கில் வைகாசிபொறந்தாச்சு படத்தை படம் வந்து இரண்டு மாதங்கள் கழித்து செகண்ட் ரிலீசாக அங்கு திரையிட்டு இருந்தனர்.இந்த முறை படத்தை எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று என் அம்மாவிடம் அடம்பிடித்தேன்
இந்த படத்திற்காக சாப்பிடாமல் கிடந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினேன்.வேறு வழியில்லாமல் என்னுடைய அம்மாவும் ஒரு நல்ல நாளை பார்த்து ஒரு காலை ஷோவிற்க்கு பவுடர் போட்டுகூட்டிசென்றார்கள்சென்றேன் .நான் சென்ற அந்த நாள் தேவக்கோட்டை நகரம் முழுவதும் ஒரு கும்பல் கடையை அடைக்கசொல்லி கட்டாயப்படுத்தியது.என்ன ஏதுனு கூட கேட்காம தியேட்டருக்கு போனா தியேட்டரிலும் இன்று காட்சி இல்லை என சொன்னார்கள்.ஏன் என்று கேட்டதற்க்கு பிரதமர் ராஜிவ்காந்தியை குண்டுவைத்து கொன்றுவிட்டார்களாம் என்றார்கள்
அடப்பாவிகளா கஷ்டப்பட்டு அம்மாவிடம் அடி வாங்கி உதை வாங்கி படத்துக்கு சென்றால் இப்படி பண்ணிவிட்டார்களே என்று சோனியா,ராகுல்.பிரியங்காவை விட எனக்கு கோபம் தலைக்கேறியது.நான் படம் பார்க்க வரும்ம்போதுதானா ராஜிவை கொல்லணும் என்று மனசு சற்று கோபப்பட்டது.சிறிது நாட்கள் கழித்து பிரச்சினை சற்று தணிந்த பிறகு அந்த வைகாசி பொறந்தாச்சு படத்தை பார்த்து என் பிறவிப்பயனை அடைந்தேன்.

காட்சி 5

இப்பொது நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் வருடம் 1993 ம் வருடம் அது.என் மாமா ஒருவர் எங்கள் வீட்டில் தங்கிவேலை பார்த்துவந்தார்.அன்று அவருக்கு விடுமுறை நாள் எனக்கோ பள்ளி நாள் மதியம் சாப்பாடு இடைவேளைக்காக அருகில் உள்ள பள்ளியில் இருந்து வீட்டிற்க்கு வருகிறேன் சாப்பிட்டு பள்ளிசெல்லாமல் என் மாமாவிடம் எங்க போறிங்கன்னு கேட்டேன் அவர் சொன்னார் எஜமான் படம் ராம்நாதபுரத்துல ரிலீசாகி இருக்கு அங்கபோறேன் என்கிறார்.நானும் வருவேன் என வழக்கம்போல என்னுடைய வேலையை காண்பித்தேன்.அம்மாவும் அவர்கள் வேலையை காண்பித்தார்கள் பள்ளிக்கு செல்லமாட்டேன் என அழுதுகொண்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள குளியலறையில் போய் உட்கார்ந்துகொண்டேன் என் பிடிவாதம் தாங்காமல்
எஜமான் படத்திற்கு என் மாமாவுடன் என் அம்மாவால் அனுப்பிவைக்கப்பட்டேன்

காட்சி6
இது 1996ம் வருடம் 10ம் வகுப்பு படிக்கிறேன் சரியாக படிப்பு வரவில்லை என்று அப்பாவால்
கொஞ்சம் தூரமாக உள்ள  கிறிஸ்தவ பள்ளியில் ஹாஸ்டலில் சேர்க்கப்பட்டேன்.எங்கு சென்றாலும் என் சினிமா தாகம் அடங்காதல்லவா.எல்லோரும் பப்ளிக் எக்ஸாம் வருகிறது என்று சீரியஸாக படித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஹாஸ்டலில் வாரம் ஒரு படம் விசிஆர்ல் போடுவார்கள் தொடர்ந்து படித்துக்கொண்டேயிராமல் கொஞ்சம் ரிலாக்ஸ்க்காக படம் போடுவார்கள் அன்று அப்படித்தான் நாசர் நடித்த அவதாரம் படத்தை எடுத்து வருகிறார்கள்
படம் ஆரம்பித்து கொஞ்சநேரத்தில் கரண்ட் கட்டாகிறது.படத்தை அடுத்த வாரத்திற்க்கு ஒத்திவைத்து விடுகிறார்கள்.இரண்டு நாட்கள் கழித்து பள்ளிக்கு செல்ல மனமில்லாமல் கண்ணை போட்டு கசக்கி பிழிந்து கண் வழி என்று லீவ் லெட்டர் எழுதி ஹாஸ்டல் வார்டனிடம்
கையெழுத்து வாங்கி மேலே ஹாஸ்டல் பெட்ரூமில் படுத்துவிட்டேன் என்னோடு சேர்ந்து இன்னொரு பையனும் காய்ச்சல் என்று படுத்து இருந்தான்.அவனிடம் நைசாக பேச்சுக்கொடுத்தேன் பெட் ரூமில்தான் டிவியை வைத்து பூட்டி இருப்பார்கள்
நாம் சாவியை எடுத்து டிவியை திறந்து படம் பார்க்கலாம் என்று சொன்னேன் அதற்க்கு அவன் சொன்னான் படம் 12.30க்கு பார்ப்போம் அதற்க்கு முன் 12மணிக்கு சுஜாதாவின் கொலையுதிர்காலம் சீரியல் வரும் அதைப்பார்ப்போம் என்கிறான் சரியாக கொலையுதிர்காலம் முடிந்தது விசி ஆர் யை  ஆன் செய்து அவதாரம் படத்தை போடமுயற்சி செய்கிறேன் சிறிது தூரத்தில் பள்ளியின் ஹெட்மாஸ்டர் ஹாஸ்டலில் பொய் சொல்லி விடுமுறை எடுப்பவர்களை
கண்காணிக்க திடீரென்று ரவுண்ட்ஸ் வருவார்.அப்படி அவதாரம் படத்தை நான் போட முயற்சி செய்தபோது நரசிம்ம அவதாரத்தில் ஹெட்மாஸ்டர் நின்றார்.ரெண்டு பேரையும் அவரால் எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்தார் ஏண்டா நாய்களா பள்ளிக்கு காய்ச்சல்னு பொய்யா லீவ் லெட்டர் கொடுத்துட்டு படமா பாக்குறிங்கன்னு அடித்தார் பாருங்க யப்பா இன்னும் வலிக்கிறது.
அத்தோடு நான் விடவில்லை பின்பு தொழிற்கல்லுரியில் சேர்ந்துபடித்தேன் அங்கும் இதே போல கிளாசுக்கு கட் அடித்து படம் பார்த்து அவ்வளவாக எதிலும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துள்ளேன்.இன்று வரை திரையரங்குக்கு சென்று அடிக்கடி படம் பார்ப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறென். மொக்கைப்படமாக இருந்தாலும் ஏதாவது ஒரு படத்துக்கு சென்றுவிடும் சினிமா பைத்தியம் நான்.


Friday 23 March 2012

நடிகர் விஜய் ஒரு சிறு சினிமா வரலாறு

இவர் தந்தை சிறுவயதில் இயக்கிய படங்களில் சிறுவயது விஜயகாந்தாக இவர்தான் நடித்திருப்பார்.பின்பு ஒரளவு 15,16 வயதுகளில் ராம்கி நடித்து இவர் தந்தை இயக்கிய‌
இது எங்கள் நீதி என்ற படத்தில்.பள்ளியில் படிக்கும் மாணவனாக நடித்து பாதியில் இறந்துவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.சென்னை லயோலா கல்லூரியில் பயின்ற விஜய்க்கு படிப்பு ஏறவில்லை இவ்வளவிற்க்கும் தற்போதைய டி.வி அறிவிப்பாளரும் ராஜ்யசபா எம்.பி ரபிபெர்னார்ட்தான் விஜய்க்கு வகுப்பாசிரியர்.கல்லூரிக்கு செல்லாமல் ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை படத்தை சென்னை உதயம் தியேட்டரில் பலமுறை பார்த்ததாக சொல்வதுண்டு



இவருக்கு படிப்பு சரியாக வரவில்லை என்பதை புரிந்துகொண்ட இவரது தந்தை இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தினால்தான் சரியாகவரும் என்று இவரை தன் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு என்றபடத்தில் அறிமுகப்படுத்தினார் படத்தின் ஹீரோயின் ஈஸ்வரிராவ்.
படத்தில் கோர்ட் சீன்களை வைத்து இவரது தந்தை தன் வழக்கத்தை மாற்றாமல் எடுத்திருப்பார்
படம் சுமாராகத்தான் போனது.அடுத்ததாக விஜய் தன் தந்தை இயக்கத்தில் செந்தூரபாண்டி என்ற படத்தில் நடித்தார் எஸ்.ஏ சந்திரசேகர் மீது உள்ள மரியாதைக்காகவும் விஜய் மீது உள்ள நட்புக்காகவும் விஜயகாந்த் கெளரவவேடத்தில் இப்படத்தில் நடித்தார்.இப்படம் சற்று வெற்றிபெற்றது.அடுத்ததாக தந்தை இயக்கத்தில் ரசிகன் படத்தில் நடித்தார் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.இப்படம் ஓடியதற்க்கு சங்கவியின்

 திகட்டலான கவர்ச்சியும் ஒரு காரணம்  அடுத்தடுத்து வந்த விஷ்ணு,ரங்கநாதன் இயக்கத்தில் வந்த கோயமுத்தூர் மாப்ளே உட்பட சில படங்களில் சங்கவியின் கவர்ச்சியே பிரதானமாக இருந்து படம் வெற்றிபெற உதவியது.இதற்க்கு மேல் இப்படிப்பட்ட படங்களில் நடித்து கொண்டிருந்தால் நன்றாக இருக்காது
என்பதை உணர்ந்த விஜய் ,பிரபல இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்த படம்தான் பூவே உனக்காக என்ற படம் 200 நாட்களை கடந்து குடும்பத்தோடு அனைவரும்
பார்க்கும் சிறந்தபடமாக இருந்தது.அடுத்ததாக பாசில் இயக்கத்தில் நடித்த காதலுக்கு மரியாதை
இவருக்கு டேர்னிங் பாய்ண்ட்டாக இருந்தது இந்தப்படம் சிறந்த இசைஞானியின் இசையாலும்
பாசிலின் சிறந்த இயக்கத்தாலும் விஜய் ஷாலினியின் சிறப்பான நடிப்பாலும் 300 நாட்களை கடந்து ஓடியது.இதோடு விஜய் மார்க்கெட் சூடுபிடித்து இதுபோன்ற காதல் கதைகளில் நடிக்க‌
ஆரம்பித்தார் அதில் துள்ளாதமனமும் துள்ளும் படம் சிறப்பாக ஓடியது படத்தை இயக்கியவர்
எழில்.இதற்க்குபிறகு இவரின் படங்கள் சொல்லிகொள்ளும்படியாக இல்லை நடுவில் செல்வபாரதி இயக்கத்தில் நடித்த வசீகரா நல்ல படமாக இருந்தும் என்ன காரணத்தினாலோ படம் சரியாகபோகவில்லை.இந்த நேரத்தில் இவருக்கு வந்து சேர்ந்த இயக்குனர் ரமணா அவர்கள்.இவரின் இயக்கத்தில் விஜய் நடித்த திருமலை என்ற படம் மசாலா படமாக இருந்தது.இந்த படத்தின் சுமாரான வெற்றி
இவருக்கு கொஞ்சம் தெம்பைகொடுத்தது.அடுத்ததாக தரணி இயக்கத்தில் நடித்த கில்லி படம்
மிகப்பெரும் வெற்றிபெற்றது.தொடர்ந்து மதுர,பகவதி,திருப்பாச்சி,சிவகாசி என்று கரம்மசாலா
படங்களாக நடிக்க ஆரம்பித்தார்.கடைசியாக இவர் நடித்த வேட்டைக்காரன்,சுறா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வ ஆரம்பித்தது.இந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட விஜய் இயக்குனர் சங்கரின் நண்பன் படத்தி நடித்தார்.படத்தின் வெற்றியால்.இப்போது பழைய இயக்குனர்கள் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வளர்ந்து வரும்,' துப்பாக்கி' படம் சிறக்க வாழ்த்துவோம்