Wednesday, 28 December 2011

இயக்குனர் பிரதாப்போத்தன்

கிறுக்குத்தனமான கோமாளி பாத்திரத்தில் படங்களில் கலக்கும் இவர் ஆரம்ப காலங்களில் பாலு
மகேந்திராவின் மூடுபனி,அழியாதகோலங்கள்,போன்ற படங்களிலும்,இயக்குனர் ஜி.என் ரங்கராஜன் இயக்கிய கரையெல்லாம் செண்பகப்பூ உட்பட பல படங்களில் நடித்து புகழ் பெற்ற‌
இவர் படங்களை இயக்கதொடங்கினார் இவர் சத்யராஜை வைத்து இயக்கிய ஜீவா படம் சூப்பர் ஹிட் அடுத்ததாக கமலை வைத்து இயக்கிய வெற்றிவிழா படத்தின் தலைப்புக்கேற்ப வெற்றி

விழா கொண்டாடியது இப்படத்தில் இடம்பெற்ற மாருகோ மாருகோ பாடல் 88,89களில் மிக பிரபலமான அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக விளங்கியது.சிவாஜி பிலிம்ஸ்க்காக‌
இவர் இயக்கிய மைடியர் மார்த்தாண்டன் படம் சிறந்த நகைச்சுவைப்படமாக விளங்கியது
அடுத்ததாக சத்யராஜுடன் இணைந்த மகுடம் நல்ல கதையம்சமுள்ள படமாக இருந்தாலும்
சோககாட்சிகள் அதிக காட்சிகள் இருந்ததால் படம் வெற்றிபெற முடியவில்லை.கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு இவர் இயக்கிய ஆத்மா திரைப்படம் வித்தியாசமான‌
கதையம்சமுள்ள வெற்றிப்படமானது.தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராகி விட்டார்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெறாத பாடல்



அபூர்வ சகோதரர்கள் படத்தை அனேகம் பேர் பார்த்திருப்பர் அந்த படத்தில் முதலில் இசைஞானி இசையமைத்து கமலஹாசன் பாடிய பாடலை காட்சிகளுடன் அனேகம் பேர் பார்த்திருக்க மாட்டர்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த பாடல்.சில காரணங்களால் இந்த பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டது[அப்பாடா கஷ்டமே இல்லாம ஒரு பதிவு போட்டாச்சு]

Thursday, 22 December 2011

ராஜ்கிரணும் ராகதேவனும்

80களின் இறுதியில் சினிமாவுக்கு வந்த ராஜ்கிரணுக்கு இளையராஜா என்றால் கொஞ்சம் மதிப்பு
ஜாஸ்தி. அண்ணன் என்று இளையராஜாவை உரிமையுடன் அழைக்கும் பழக்கம் உள்ளவர்.இளையராஜா மேல் உள்ள மரியாதை காரணமாக தன் படங்களுக்கு ராசா என்ற வார்த்தை வருவதை வழக்கமாக வைத்திருந்தார் இவரது தயாரிப்பு நிறுவனமான ரெட்சன் ஆர்ட்
கிரியேசன்ஸ் சார்பாக இவர் தயாரித்த இயக்கிய படங்கள் சக்கை போடு போட்டன எனது ஊரான இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் இவர் என்பதில் கொஞ்சம் பெருமை எனக்கு
உண்டு.இவர் இயக்கிய படங்கள் அரண்மனைக்கிளி,எல்லாமே என் ராசாதான், ஆகியவை இவர்
இயக்கிய படங்கள் இவர் தயாரிப்பு மட்டும் பண்ணிய படங்கள் ராசாவே உன்னை நம்பி,என்னெப்பெத்த ராசா,என்னை விட்டு போகாதே,என்ராசாவின் மனசிலே இவர் முதலில் திரையில் தோன்றிய படம்
ராசாவே உன்னை நம்பி என்ற படத்தில் இடம்பெற்ற சீதைக்கொரு ராவணன் பாடல் மூலம் திரையில் தோன்றினார்.எப்படி எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு டி.எம்.எஸ் குரல் பொருந்துகிறதோ
அதைப்போல இவரது நடிப்புக்கு இளையராஜா குரல் இயல்பாக பொருந்தும் .90களின் இறுதியில்
இளையராஜாஇசை மூலம்குளிர்காய்ந்து நல்ல படங்களை கொடுத்த‌  மணிரத்னம்,பாரதி ராஜா,பாலச்சந்தர்.ஆகியோர் விலகிய நேரத்தில் ராஜ்கிரணின் படங்களாலும் பாடல்களாலும்
இசைஞானிக்கு சற்று ஆறுதலை தந்தது உண்மை.இவர் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும்
அரண்மணைக்கிளி படத்தில் இடம்பெற்ற அம்மன் கோவில் கும்பம் பாடல் மூலம் சிறப்பான‌
நடிப்பை வெளிப்படுத்தி மதச்சார்பின்மைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.இசைஞானி என்று அடைமொழியுடன் அறியப்பட்ட இளையராஜாவை ராகதேவன் என்று தன் படங்களில் புது நாமகரணம் சூட்டி நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த நல்ல நடிப்புத்திறமையுள்ள சிறந்த கலைஞர் இவர்

Sunday, 18 December 2011

தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர்



இவரது பெயர் சங்கர் என இருந்ததை இவரது முதல்பட இயக்குனர் ஜோசப் தளியத் ஜெய்சங்கரென
மாற்றியமைத்தார்.1965ல் வெளிவந்த இரவும்பகலும் படத்தில் இவர் அறிமுகமானார்
பல படங்களில் சி.ஐ.டி,போலீஸ் வேடங்களில் நடித்து இவர் அந்தக்கால விஜயகாந்தாக இருந்தார்.
இவரின் படங்களில் குறிப்பிடத்தக்கது யார்நீ,மற்றும் சி.ஐ.டி சங்கர் முதலியனவாகும்.சி.ஐ.டி சங்கர் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்தபடம்
தொடர்ச்சியாக இவர் படங்களில் பிஸியாக நடித்ததால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவர்
படம் வெளியாகும்.அதனால் இவருக்கு வெள்ளிக்கிழமை நாயகர் என்ற மற்றொருபெயரும் உண்டு.ரஜினி ,கமல் படங்களில் வில்லனாக நடித்தவர் முரட்டுக்காளை,துடிக்கும் கரங்கள்.காதல் பரிசு,படிக்காதவன் உட்பட பல படங்களில் நடித்தவர்.200ம் ஆண்டு இவர் மரணமடைந்தார் இவர் இறந்தாலும் இவர் துப்பாக்கியோடு நிற்க்கும் படங்களை பார்க்கும்போது இவர் உயிரோடு இருப்பதை போலவே தோன்றுகிறது.எவ்வளவு அற்புதமான நடிகர்.

Thursday, 15 December 2011

இயக்குனர் டி.பி கஜேந்திரன்



இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் வீடு மனைவி மக்கள் படம் மூலம் இயக்குனராகி
இவரது குருநாதரையே நடிக்க வைத்தார்.படம் குடும்ப படமாதலால் சுமாராக போயிற்று.அடுத்ததாக பெண்கள் வீட்டின்
கண்கள் என்ற படத்தை இயக்கினார்.இதுவும் சுமாராக போகவே இந்த ரூட்டில் பயணிக்காமல் ஆக்சன் ரூட்டுக்கு மாறினார் பிரபு இரட்டை வேடத்தில் நடித்த காவலன் அவன் கோவலன் படத்தை இயக்கினார் இந்தப்படம் பக்கா கமர்ஷியல் படமாகும்.இந்த படமும் சுமாரான வெற்றியாகும்.தொடர்ந்து ராமராஜனை வைத்து எங்க ஊரு காவல்காரன்
படத்தை இயக்கினார்.படம் மட்டுமல்லாது பாடல்களும் வெற்றிபெற்றது.அடுத்தாக இவர் இயக்கியதில் மெஹா ஹிட் படம் என்றால் கார்த்திக் நடித்த பாண்டி நாட்டு தங்கம் வரலாறு காணாத வகையில் வசூலை அள்ளியது.இவர் பெயர்
சொல்லும் அளவிற்கு பெரிய படங்களை இயக்காவிட்டாலும் சிறிய முதலீட்டில் சுமாரான வசூலை தரும் சிறந்த இயக்குனர் இவர் .இவரின் பாட்டு வாத்தியார்,மிடில் கிளாஸ் மாதவன்,பட்ஜெட் பத்மநாபன்,சீனாதானா007 உட்பட‌
படங்களும் இவர் இயக்கிய சுமார் வெற்றிப்படங்களே

Monday, 12 December 2011

விஜயகாந்த் ஒரு சின்ன முன்னோட்டம்



இவர்கள் இருவரும் இப்போது முழுநேர அரசியல்வாதிகளாகி விட்டனர் இவர்கள் வாழ்க்கை பற்றி ஒரு சின்ன முன்னோட்டம்

எம்.ஜி.ஆரின் ரசிகரான விஜயகாந்த் மதுரையில் தந்தை அழகர்சாமி நடத்திய ரைஸ்மில்லில் வேலை செய்தார்.இவருக்கிருந்த சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்தார்.தன் நண்பர் அ.செ இப்ராஹிம்
ராவுத்தர் இவருக்கு பக்கபலமாக இருந்தார். கடுமையான முயற்சிக்கு பிறகு இனிக்கும் இளமை படத்தில் நாயகனாக‌
அறிமுகமானார்.தொடர்ந்து அகல்விளக்கு,தூரத்து இடி முழக்கம் உட்பட பல படங்களில் நடித்தார்.இவரது நான்காவது
படமான தூரத்து இடி முழக்கம் படமே தேசியவிருது பெற்ற படமாகும் இயக்குனர் சுந்தர்ராஜனின் வைதேகி காத்திருந்தாள் படம் இவரது நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.தொடர்ந்து இவர் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இவரை

வைத்து அதிக வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார் அதில் நல்லவன்,புலன்விசாரணை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.இவர் கலைஞரின் அபிமானியாக இருந்தார் இவரது கல்யாணத்தை நடத்தி வைத்ததே கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்தான்.இவரது வசனத்தில் சிறையில் பூத்த சின்ன மலர்,பொறுத்தது போதும் படங்களில் நடித்துள்ளார்.இவரது அரசியல் ஆசையை ஆரம்பித்து வைத்தது லியாகத் அலிகான் அவர்கள் எழுதிய வசனம்தான்
இவர்கள் இருவரும் ஏழைஜாதி,எங்கமுதலாளி,பாட்டுக்கு ஒரு தலைவன் ,கேப்டன் பிரபாகரன் உட்பட பல படங்களில்
வசனகர்த்தாவாகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் இவர் எழுதி கொடுத்த பல படங்களில் வசனம் அனல் பறக்கும் அரசியல் வசனமாகத்தான் இருந்தது.விஜயகாந்தின் அரசியல் ஆசைக்கு தூண்டுக்கோலாக இவரது வசனங்கள்
விளங்கியது. இப்ப்போது தனிக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவரானதுதான் எல்லாருக்கும் தெரியுமே

Friday, 9 December 2011

இளையராஜாவும் சில தேன்குரல்களும்



இளையராஜாவின் பாடல்களுக்கு மயங்காதார் இந்த தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்க்கு இவரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு இவரோடு சேர்ந்து
இவரின் ஒவ்வொருபாடலையும் அழகுபடுத்திய பின்னணி பாடக,,பாடகிகளை பற்றி பார்க்கவே
இந்தபதிவு.

எஸ்.பி.பி


தமிழில் எம்.ஜி.ஆர் காலத்திலே அறிமுகமானாலும் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய‌
பாடல்கள் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது குறிப்பாக இளையராஜாவும் இவரும் வாடா போடா
என்று அழைத்துகொள்ளக்கூடிய அளவிற்க்கு நெருங்கிய நண்பர்கள்.இவர் தமிழ் ,தெலுங்கு படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்கள்.இவரின் குரலில் பிடித்த பாடல்களை குறிப்பிட்டு சொல்லமுடியாது.இருந்தாலும் எனக்கு பிடித்த சில பாடல்கள்
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் ,தகிட ததிமி தந்தானா,
தோகை இளமயில்,சங்கீத ஜாதிமுல்லை, இப்படி எண்ணற்ற பாடல்களை சொல்லிக்கொண்டே
போகலாம் இந்த பதிவு பத்தாது.

கே.ஜே ஜேசுதாஸ்


பொம்மை படத்தில் நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல்மூலம் அறிமுகமான ஜேசுதாஸ்
தமிழ்,மலையாளம்படங்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் அருமையான‌
குரல்வளம் உள்ள ஜேசுதாஸின் குரல் இளையராஜாவின் சோகப்பாடல்களுக்கு பொருந்தி போகும் என் ஜீவன் பாடுது,உயிரே உயிரின் உயிரே கங்கை கரை மன்னனடி போன்ற பாடல்களை
உதாரணமாக சொல்லாம்.ஆகாயவெண்ணிலாவே தரைமீது வந்ததேனோ காதல் பாடலாகட்டும்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுக்குட்டி போன்ற துள்ளளிசை பாடலாகட்டும் எதை கொடுத்தாலும் வெளுத்துக்கட்டுவார்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்இவரின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது சொர்க்கத்தின் வாசற்படி,ஆகாய வெண்ணிலாவே போன்ற பாடல்கள்
என் ஆல் டைம் பேவரிட் சாங்.

மனோ


இளையராஜாவின் அறிமுகமானஇவர் நாகூர் என்ற இயற்பெயரைக்கொண்டவர் இளையராஜாவால் மனோ என்ற பெயர் சூட்டப்பட்டு சொல்லத்துடிக்குது மனசு படத்தில் இடம்பெற்ற தேன்மொழி பாடல் மூலம் பிரபலாமானவர்.எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில்
மதுரை மரிக்கொழுந்து பாடல் இவர் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.குரலை மாற்றி பாடுவதில் வல்லவரான மனோ சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற வேதாளம் வந்து நிக்குது
பாடலை குரலை மாற்றி அதி அற்புதமாக பாடியவர்.இரண்டில் ஒன்று படத்தில் இடம்பெற்ற‌
சங்கீத பூமலையே,புதியராகம் படத்தில் இடம்பெற்ற ஓஜனனி, எங்க ஊரு மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற வானத்துல வெள்ளிரதம் பாடலும் படத்தில் இடம்பெறாத அமைதிப்படை பாடலான சொல்லிவிடு வெள்ளி நிலவே பாடலும் மைக்கெல் மதன காமராஜன் பாடலான ஆடிப்பட்டம் தேடிச்சன்னல் விதைபோட்டு பாடலும் என் விருப்பபாடல்கள் எதனால் படத்தில் இவை இடம்பெறவில்லை எனத்தெரியவில்லை.


தீபன்சக்கரவர்த்தி


மறைந்த பாடகரான திருச்சிலோகநாதனின் மகன் இவர் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற‌
தத்துவத்தின் அடிப்படையில் இவரும் சிறந்த பாடகர்தான்.இவர் குரலை மாற்றிப்பாடிய கோழி
கூவுது பாடலான அண்ணே அண்ணே சிப்பாயண்னே பாடல் இவர்தான் பாடினார் என யாராலும்
கண்டுபிடிக்கமுடியாது குறிப்பாக காதல் ஓவியம் படத்தில் இடம்பெற்ற பூஜைக்காக வாழும்
பூவை சூறையாடல் முறையோ பாடலை இவரையும் எஸ்.பி.பியையும் பாடவைத்து எஸ்.பி.பி
பாடியதை இளையராஜா சேர்த்துவிட்டார் எஸ்.பி.பி தலையிட்டு இவர் பாடியதே நன்றாக இருந்ததென சொல்ல அதையே படத்தில் சேர்த்துவிட்டார் இளையராஜா.எங்க ஊரு காவல்காரன்
படத்தில் இடம்பெற்ற அரும்பாகி மொட்டாகி பூவாகி எனக்கு மிகப்பிடித்தபாடல்.

கிருஷ்ணசந்தர்


மலையாளப்பாடகரான இவர் இளையராஜாவின் இசையில் அதிகம் பாடாவிட்டாலும் ஒரு
ஓடை நதியாகிறது படத்தில் இடம்பெற்ற தென்றல் என்னை முத்தமிட்டது பாடல் எனக்கு மிகப்பிடித்த பாடல்


விஜய் என்ற உன்னிமேனன்


தற்போது வரும் பாடல்களை அதிகம் பாடும் பாடகர்தான் என்று இவரை நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் 80களில் வெளியான ஒரு கைதியின் டைரி படத்தில்
இடம்பெற்ற பொன்மானே கோபம் ஏனோ பாடலை இவர்தான் விஜய் என்ற பெயரில் பாடினார்
என எனக்கு கொஞ்சம் தாமதமாகத்தான் தெரிந்தது.

உன்னிக்கிருஷ்ணன்


இளையராஜாவின் இசையில் தாஜ்மகால் அருகே விஜய்,வனிதா ஆடும் அல்லா உன் ஆணைப்படி பாடல் அந்த தாஜ்மகால் போலவே வரலாற்றில் நிலைத்து இருக்கும் குறிப்பாக‌
காதல் ரோஜாவே படத்தில் இடம்பெற்ற நினைத்தவரம் கேட்டு பாடல் மிக மிக இனிய பாடல்

மலேசியா வாசுதேவன்


இளையராஜாவின் அனேக துள்ளளிசை பாடல்களில் துள்ளலான இவரின் குரல்தான் அதிகம் ஒலிக்கும்.தேடும் தெய்வம் நேரில் வந்தது,ஆட்டுக்குட்டி முட்டையிட்டு,மாவீரன் படத்தில்
இடம்பெற்ற வாங்கடா வாங்க வண்டிக்கு பின்னாலே முரட்டுக்காளை பாடலான பொதுவாக‌
எம்மனசு தங்கம் போன்ற பாடல்கள் என்று இவரின் துள்ளல் பாடல்களை பட்டியல் போட‌
இந்த ஒரு பதிவு பத்தாது மெலடி பாடல்களிலும் இவர் ஒரு கிங்தான் குறிப்பாக பன்னீர்புஷ்பங்கள்
படத்தின் பாடலான கோடைகாலகாற்றே,பாகவதர் குரலில் பாடிய ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே,சுகராகமே பாடல்களை தமிழ்சினிமா இருக்கும் வரை மறக்கமுடியாது

பாலமுரளிகிருஷ்ணா


இவர் பிரபல கர்நாடக இசைமேதையாவார் இவரையும் இளையராஜா விடவில்லை இவரது முயற்சியால் கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற சின்னக்கண்ணன் அழைக்கிறான் பாடல் மூலம்
நம்மை மெய்மறக்கசெய்து இருப்பார்




அருண்மொழி&எஸ்.என் சுரேந்தர்



இளையராஜாவிடம் புல்லாங்குழல் வாசித்த அருண்மொழி சூரசம்ஹாரம் படத்தில் இடம்பெற்ற‌
நான் என்பது நீயல்லவோ பாடல்மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார் சில பாடகர்களின்
சில பாடல்கள் ஒருவர் என்னதான் ஒரு பின்னணி பாடகரின் ரசிகராக இருந்தாலும் அவர் பாடிய ஏதாவது ஒரு பாடல் பிடிக்காமல் போகும் இவரை பொறுத்தவரை இவர் பாடிய அனைத்து பாடல்களும் எல்லாருக்கும் பிடிக்கும் அந்த அளவிற்க்கு எல்லோரையும் கட்டிப்போடும் இவரது
குரல்வளம் ராஜாவின் பார்வையிலே படத்தில் இடம்பெற்ற அம்மன்கோவில் எல்லாமே எனக்கு
மிகவும் பிடித்த பாடல் அதே போல எதிர்காற்று படத்தில் இடம்பெற்ற ராஜா இல்லா ராணி என்றும் பாடலும் மிக பிடித்த பாடல் அதேபோல் நடிகர் மோகனுக்கு பல படங்களில் குரல் கொடுத்த எஸ்.என் சுரேந்தரும் மிகபிடித்த பாடகர்தான் குறிப்பாக இன்னிசை மழை படத்தில் இடம் பெற்ற மங்கை நீ மாங்கனி பாடல் தேவன்கோவில் தீபம் ஒன்று பாடலும் மிகச்சிறப்பான‌
பாடலாகும்.

ஜெயச்சந்திரன்


ராஜாவின் இசையில் மெகா ஹிட்டான ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு,காத்திருந்து காத்திருந்து
பாடல் இவர் பாடியதுதான் இவரும் இனிய குரல் உள்ள சிறந்த பாடகர்தான் இவர் பாடிய தழுவாத‌
கைகள் படத்தில் இடம்பெற்ற ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ, போன்ற பாடல்களை 80களின் இளசுகள் யாராலும் மறக்கமுடியாது அதேபோல் உள்ளம் கவர்ந்த கள்வன் படத்தில் இடம்பெற்ற‌
என் மனச பறிகொடுத்து பாடலும் மிகச்சிறப்பான பாடல்

கமலஹாசன்


நடிகர்களில் கமலஹாசன் தான் இவர் இசையில் அதிக பாடல்கள் பாடியுள்ளார் அவள் அப்படித்தான் தொடங்கி ராஜபார்வையில் இடம்பெற்ற விழியோரத்து பாடல்மூலம் நம் நெஞ்சம்
கசக்கி பிழிந்தவர் சிங்காரவேலன்,பேர்சொல்லும்பிள்ளை,அபூர்வசகோதரர்கள்,சத்யா போன்ற தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது பாடிவிடுவது இவர் வழக்கம்.இவர் படத்துக்கு மட்டுமல்லாது மோகன் நடித்த ஓமானே மானே படத்தின் பாடலான பொன்மானே தேடுதே பாடலுக்கும் குரல் கொடுத்தவர் இவர்.

டி.எஸ் ராகவேந்தர்


வைதேகி காத்திருந்தாள் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்ற அழகுமலராட பாடலில் க்ளைமாக்ஸில் பாடியே இறந்துவிடுவாரே அவர்தான் இவர். இவரும் இளையராஜாவுக்கும் உள்ள நட்பால் சில படங்களில் பாடியுள்ளார்
அதில் சக்கரைதேவன் படத்தில் இடம்பெற்ற பாக்குகொண்டா வெத்தலை கொண்டா பாடல் மிகவும் ஹிட் ஆன பாடலாகும்.

சங்கர்மஹாதேவன்


இவர் பாடியதில் சிட்டுபறக்குது குத்தாலத்தில் பாடல் என்மனம் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரின்
மனம் கவர்ந்த பாடல். இவர் பாடிய ஆக்ரோஷமான பாடலான அந்தபுரத்தில் இடம்பெற்ற தை தகதை பாடல் ரத்தத்தை சூடேற்றும் பாடலாகும்.

ஹரிஹரன்


புதியதலைமுறை பாடகராக இருந்தாலும் இளையராஜாவிடம் தீவிர நட்புடன் இருப்பார் இவர் பாடிய என்னை தாலாட்ட வருவாளா பாடல் 97ம் ஆண்டு இண்டு,இடுக்கு சந்து பொந்துகளில் எல்லாம் தமிழ்நாட்டில் ஒழித்த பாடல். இவரின் திறமையை வைத்து இளையராஜா யாருக்குமே
கொடுக்காத வாய்ப்பாக காசி படத்தில் எல்லா பாடல்களையும் இவரையே பாட வைத்தார்.

ஜாலி ஆப்ரஹாம்



கிறிஸ்தவமத பக்தி பாடல்களை பாடுபவர் இவர். தமிழில் வேறு இசையமைப்பாளர்கள்
சிலரின் இசையில் பாடல்கள் பாடியிருந்தாலும் கட்ட பஞ்சாயத்து படத்தில் இடம்பெற்ற ஒரு சின்னமணிக்குயிலு பாடல் பட்டிதொட்டியெங்கும் இவரைபறைசாற்றியது.மேலும் மாயா பஜார்1995
உட்பட பல படங்களில் இவர் பாடியுள்ளார்

இன்னும் பல பாடகர்கள் பாடகிகள் ஏராளமானோர் உள்ளனர் அவர்களை பற்றி அடுத்த பதிவில்
பார்ப்போம்
 தொடரும்.........

Wednesday, 7 December 2011

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்



வாசகர்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
தீபம் சுடர்விட்டு எரிவதுபோல வாழ்க்கையும் இனிதாய் சிறக்கட்டும்.உங்களுக்காக இதோ இசைஞானியின் இசையில் வந்த ஒரு இனிய பாடல்

Tuesday, 6 December 2011

வில்லனாக நடித்த கதாநாயகர்கள்



தமிழ் சினிமாவில் வில்லனாக சில முக்கிய நடிகர்கள் நடித்திருந்தாலும் கதாநாயகர்கள் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் வில்லனாக சில படங்களில் நடித்திருப்பார்கள் அவர்கள் யார் யார் எந்த எந்த படத்தில் வில்லனாக நடித்தார்கள் என்று ஒரு சிறு பதிவு

சிவாஜிகணேசன்:கூண்டுக்கிளி,அந்தநாள்

ஜெமினி:வல்லவனுக்கு வல்லவன்

ரஜினிகாந்த்:16வயதினிலே

கமலஹாசன்:சொல்லத்தான் நினைக்கிறேன்,குமாஸ்தாவின் மகள்

விஜயகாந்த்:இனிக்கும் இளமை

சத்யராஜ்: அதிக படங்கள் நடித்தாலும் சில குறிப்பிடத்தக்க படங்கள் நூறாவது
நாள்,தங்கைகோர்கீதம்,24மணிநேரம்,காக்கிசட்டை,விக்ரம்

பிரபு:நம்பினார் கெடுவதில்லை{அய்யப்ப பக்தி படம்}

கார்த்திக்:நல்லவனுக்கு நல்லவன்

அர்ஜூன்:மங்காத்தா

அஜித்:மங்காத்தா

விஜய்:அழகிய தமிழ் மகன்

பிரசன்னா:அஞ்சாதே,முரண்

ஜீவா:சிங்கம்புலி

விக்ரம்:ராவணன்

நாளைய பதிவில் கதாநாயகனாக நடித்த வில்லன்கள் பற்றி பார்ப்போம்





Sunday, 4 December 2011

சினிமாவில் தாய்மார்கள்






சினிமாவில் கண்ணாம்பாள் காலம் முதல் பல தாய்மார்கள் வந்து போய் கொண்டுதான் இருக்கின்றனர் அவர்களில்
சிலர் நீண்டகாலம் நிலைத்து சினிமாவில் வரலாற்றுத்தாயாக ஜொலிக்கின்றனர் அவர்களில் சிலரைப்பற்றி பார்க்க‌
இருக்கிறோம்.உதாரணமாக எஸ்.என் லட்சுமி என்ற நடிகை ஆரம்பகால துலாபாரம் உட்பட பல படங்களில் தாயாகவும்
தற்போது வரும் படங்களில் பாட்டியாகவும் நடித்து வருகிறார் அப்போது பார்த்த மாதிரியே இன்னும் இருக்கிறார்
அடுத்ததாக ஆச்சி மனோரமா பல பழைய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் புதிய 80,90களில் வந்த‌
அனேகபடங்களில் அன்புத்தாயாக நடித்து அனைத்து தாய்மார்கள் மனதிலும் குடிபுகுந்தவர்.இவர் தாய்வேடத்தில்
நடித்த அண்ணாமலை.ஜென்டில்மேன்,சின்னக்கவுண்டர்.கிழக்குவாசல் போன்ற படங்கள் புகழ்பெற்றவை ஏறக்குறைய‌
பல முக்கிய நடிகர்களுக்கு தாயாக நடித்தவர் இவர்தான்.இவருக்கு அடுத்த இடத்தை பிடிப்பவர் சுஜாதா இவரும் தனக்கு
ஜோடியாக நடித்த ரஜினி,கமல்.பிரபு உட்பட முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் இவர்தான்இவரது நடிப்புக்கு விதி,உன்னை நான்
சந்தித்தேன்,உழைப்பாளி போன்ற படங்களை கூறலாம்.பண்டரிபாய்
அடுத்த இடத்தை பெறுகிறார் இவர் ரஜினி,கமல் உட்பட பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்தவர் இவரின் சிறந்த தாய்
நடிப்புக்கு மன்னன் படத்தை உதாரணமாக சொல்லலாம் அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே பாடலில் நம்
தாயை ஞாபகபடுத்துவார்.மேலும் சில தாயாக நடித்த‌ நடிகைகள் பட்டியல்

விஜயகுமாரி
சுமித்ரா
காந்திமதி
சீதா
கோவைசரளா
sriவித்யா

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

இருந்தாலும் கட்டுரையில் சொன்ன அந்த 4 அம்மாக்களே அம்மா என்றவுடன் நம் மனதில் பளிச்சிடுகின்றனர்

Friday, 2 December 2011

தெரியாத வெற்றி இயக்குனர் ஷண்முகப்பிரியன்

இரண்டு நாட்களுக்கு முன் கே.ரங்கராஜ் என்ற இயக்குனர் பற்றிப்பார்த்தோம் அவரைப்போல‌
சிறந்த படங்களை கொடுத்த அதிகம் அறியப்படாதவர்கள் வரிசையில் இயக்குனர் சண்முப்பிரியன் பற்றி பார்க்க இருக்கிறோம்

மகுடம்.அம்மன் கோவில் கிழக்காலே,பிக்பாக்கெட் உட்பட சில படங்களுக்கு கதைவசனகர்த்தாவாக பணியாற்றியவர் இவர்.இவரது இயக்கத்தில் வந்த ஒருவர் வாழும் ஆலயம் சிறந்ததொரு காதல்படமாகவந்தது ரகுமான்,பிரபு,சிவக்குமார் நடிப்பில் வெற்றிப்படம்
இது.நீ பவுர்ணமி,சிங்காரபெண்ணொருத்தி,மலையோரம் மயிலே உட்பட சிறந்தபாடல்கள் இப்படத்தில் இளையராஜா இசையில் வந்தன கர்நாடக இசையை அடிப்படையாக கொண்ட‌
சிறந்த படமாகவும் சிந்து பைரவி படத்திற்கு பிறகு சிவக்குமாருக்கு சிறந்ததொரு இசைப்படமாகவும் இது அமைந்தது இயக்குனர் ஷண்முகப்பிரியனுக்கு பெயர் சொல்லிய‌
சிறந்த படம் இது

அடுத்தாக இவர் ராமராஜனை வைத்து இயக்கிய பாட்டுக்கு நான் அடிமை படமும் பாடல்களாலும்
கதையாலும் மிகப்பெரும் வெற்றிபெற்றது.இசைசக்ரவர்த்தி இளையராஜா இசையில் தாலாட்டு
கேட்காத,யார்பாடும் பாடல் என்றாலும் பாடல்கள் மிகபுகழ்பெற்றது இதுவும் ஒரு மியூசிக்கல்
சம்பந்தமான படம்தான்

அடுத்தாக இவர் இயக்கிய மதுரை வீரன் எங்கசாமி,உதவும் கரங்கள் போன்ற படங்கள் சரியாக‌
செல்லவில்லை.இவர் இயக்கிய மற்றுமொருபடமான பாண்டித்துரை படம் குடும்ப உறவுகளை
ஆழமாகசொன்னபடம் .

80களில் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டிய முக்கியமான இயக்குனர் வழக்கம்போல் இவருடைய புகைப்படமும் கிடைக்கவில்லை



Wednesday, 30 November 2011

அயல்நாட்டில் எடுக்கப்பட்ட வெற்றிப்படங்கள்








தற்போது உள்ள சினிமாவில் கதாநாயகன் கதாநாயகிக்கு காதல் டூயட் ஆரம்பிப்பதே வெளிநாட்டில்தான் ஒன்றுக்கும் உதவாத பாடலுக்கு பலகோடி செலவழித்து பாடல்
ஷூட் செய்வார்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் கதாநாயகனும் டைரக்டரும் கொடுக்கும்
பேட்டி ஆக்சுவலி அந்த பாடலுக்கு என்று ஆரம்பித்து அவர்கள் கொடுக்கும் பேட்டியை
தாங்கமுடியாது.படம் வந்தால் படத்தில் ஒன்றும் இருக்காதுஇதையும் தாண்டி வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட சிறப்பான படங்களை பற்றி பார்க்கவே இந்த பதிவு

நாடுகள் வாரியாக படங்கள்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கும் தமிழ் சினிமாவுக்கும் அப்படியொரு தொடர்பு அதிகபட்ச படங்கள் சிங்கப்பூரை
சுற்றி எடுத்த படங்களாகவே உள்ளன‌

முதலில் எம்.ஜி.ஆர் சிங்கப்பூரை சுற்றி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எடுத்தார் படம்
மிகப்பெரியவெற்றி அடைந்தது இதில் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு விஞ்ஞானியாக நடித்து
பெரும்புகழ்பெற்றது சிங்கப்பூர் மட்டுமல்லாது ஹாங்காங்,மலேசியா சைனா போன்ற நாடுகளில்
எடுக்கப்பட்டு வெற்றி அடைந்தபடம் இது.இதுவரை இதன் டி,வி ரைட்ஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது

அடுத்தாக முருகனின் பெருமைகளை கூறும் வருவான் வடிவேலன் படம் இங்கு எடுக்கப்பட்டது
இந்த படமும் மகத்தான வெற்றிபெற்ற பக்தி படமாகும்.


ரஜினி கமலும் இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படம் பாலச்சந்தரின் கைவரிசையில்
எம்.எஸ்.வி இசையில் இங்கு எடுக்கப்பட்ட படமாகும் 15 பாடல்களுக்கும் மேல் உள்ள இந்த படத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலில் சிங்கப்பூரை நன்றாக சுற்றி காண்பித்து
இருப்பார்கள்

ப்ரியா

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கிடைத்த படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி
நடித்து பட்டையை கிளப்பிய படம் இது.அக்கறை சீமை அழகினிலே பாடல் மூலம் சிங்கப்பூரை
நன்கு சுற்றிகாண்பித்து இருப்பார்கள்


பூமழை பொழியுது

ரஜினியும் கமலும் சிங்கப்பூர் சென்றால் நானும் செல்வேனென்று விஜயகாந்தும் சென்ற இடம் [சாரி]
படம் பூமழை பொழியுது அழகப்பன் இயக்கத்தில் சுரேஷ் ,நதியா ,விஜயகாந்த் நடிப்பில் இது
ஒரு காதல் படம்.

தமிழ் நாட்டில் வந்த சிங்கப்பூர் பேயாக கெளதமி,அவரது கணவராக ராமராஜன் நடித்து கங்கை
அமரன் இயக்கத்தில் வந்த கலகலப்பான் பரபரப்பான படம்தான் ஊரு விட்டு ஊரு வந்து. பேயை
விரட்டுவதற்க்கு ராமராஜனுடன் கவுண்டமணி செந்திலும் சிங்கப்பூர் சென்றால் கலகலப்பிற்க்கு
கேட்கவா வேண்டும்



அமெரிக்கா



இங்கு அதிகப்படங்கள் எடுக்கப்படவில்லை ஜீன்ஸ் படம் மூலம் ஷங்கர் அழகிய அமெரிக்காவை
காண்பித்திருப்பார் அதற்க்கு பிறகு கெளதம் மேனன் வேட்டையாடு விளையாடு படம் மூலம்
கமல்ஹாசனை போலீஸ் அதிகாரியாக உலவ விட்டிருப்பார்.

கனடா

அரசாங்கம் படம் மூலம் விஜயகாந்த் சென்று வந்த நாடு இது ஒரு வழக்கு விசயமாக கனடா சென்று குற்றவாளியை கண்டுபிடிக்கும் கதை இது

லண்டன்


லண்டன் இந்த பெயரிலேயே சுந்தர் சி ஒரு படம் எடுத்தார் படம் சரியாகபோகவில்லை



அதற்க்கு முன்பே பி.வாசுவின் இயக்கத்தில் வந்த லவ்பேர்ட்ஸ் படம் லண்டனில் முழுக்க எடுத்த‌
படமாக வந்தது.


ஜப்பான்


ஜி.என் ரங்கராஜன் இயக்கிய கல்யாணராமன் படத்தின் தொடர்ச்சியாக ஜப்பானில் கல்யாணராமன் படம் வந்தது கமல் ஆவியாகவும் மனிதனாகவும் இரட்டை வேடத்தில் நடித்த‌
படம் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வந்த படம் ஜப்பானை இவ்வளவு அழகாக எந்த படத்திலும் காண்பித்தாக எனக்கு தெரியவில்லை குறிப்பாக எக்ஸ்போ 85 என்ற ஜப்பானின்
பொருட்காட்சி 5 நிமிடம் வந்து போகும் அருமையான ஓளிப்பதிவு


ஜெர்மனி


ஜெர்மனியில் எடுக்கப்பட்ட சிறப்பான படம் உல்லாசபறவைகள் ஆகும்.கமலின் மனநோயாளியான கமல் ட்ரீட்மென்டுக்காக  ஜெர்மன் செல்வது போல‌
காட்சிகள் அமைக்கப்பட்டு அங்கே ஒரு காதலும் சொல்லப்பட்டிருக்கும் இளையராஜாவின்
இசையில் ஜெர்மனியின் செந்தேன்மலரே .அழகு ஆயிரம் பாடல்கள்மூலம் ஜெர்மனியை நன்கு
சுற்றிகாண்பித்திருக்கும் படத்தின் கேமரா.


துபாய்


துபாயில் எடுக்கப்பட்ட படம் நாசர் அவர்கள் இயக்கிய தேவதை படம். வினித்,கீர்த்தி சாவ்லா
நடிப்பில் சிறந்ததொரு காதல்படம் நாள்தோறும் எந்தன் கண்ணில் நீ பவுர்ணமி பாடல் மூலம்
துபாயின் அழகை அள்ளிவந்திருக்கும் படம் இது



மலேசியாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் மலேசியாவை அழகாக காண்பித்தது
பில்லா படத்தில்தான் நீரவ்ஷா வின் கேமரா மலேசிய பத்துமலை முருகன் கோவிலின் அழகை
அள்ளிவந்திருக்கும் விஷ்னுவர்த்தன் இயக்கிய படம் இது

Monday, 28 November 2011

இயக்குனர் கே.ரங்கராஜ் ஒரு வரலாற்று பிழை






80களில் பாரதிராஜா,பாலச்சந்தர்,பாசில்,மணிரத்னம்,பாக்யராஜ் போன்ற இயக்குனர்களின் கை ஓங்கி இருந்த நேரம் அந்த நேரத்தில் பல வெற்றிப்படங்களை சத்தமில்லாமல் கொடுத்தவர்தான்
இயக்குனர் கே .ரங்கராஜ் அவர்கள்.இவர் இயக்கிய அனைத்துபடங்களுமே வெற்றிப்படங்கள் என்று சொன்னால் மிகையாகாது ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை இவரது பெயரும்
புகழும் அந்தளவிற்க்கு வெளியில் தெரியாமல் மறைந்துவிட்டது.தற்போது இவர் என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை.பத்திரிக்கைகள் மீடியாக்கள் என‌
எங்குமே இவர் பற்றி வாய்திறப்பதில்லை.எது தேடினாலும் கிடைக்கும் என்ற கூகிளில் கூட‌
இவரைப்பற்றி செய்திகளோ இவரது புகைப்படமோ கிடைக்கவில்லை இயக்குனருக்கும்
இசையமைப்பாளருக்கும் உள்ள கெமிஸ்ட்ரியில் இவருக்கும் இளையராஜாவுக்கும் உள்ள‌
கெமிஸ்ட்ரி அளவிடமுடியாதது இவர்களது இயக்கம் மற்றும் இசையில் வந்த பாடல்கள்
அனைத்தும் மியூசிக்கல் ஹிட்.வெள்ளிவிழா நாயகன் என்று கருதப்பட்ட மோகனுக்கு அதிக‌
படங்கள் கொடுத்து வெற்றிப்படங்களாக மாற்றியவர் குறிப்பாக இவர் மோகனை வைத்து
இயக்கிய நெஞ்சமெல்லாம் நீயே ,உதயகீதம்.உன்னை நான் சந்தித்தேன்,பாடுநிலாவே ஆகிய‌
படங்கள்  வெற்றிப்படங்கள் ஆகும் குறிப்பாக உதயகீதம் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆகும்
தொடர்ந்து இளையராஜாவின் நட்பால் அவரின் சொந்தப்படமான கீதாஞ்சலி படம் இயக்கும்
வாய்ப்பை பெற்றார் .அதில் இடம்பெற்ற ஒருஜீவன் அழைத்தது போன்ற ஜீவனுள்ள பாடல்கள்
எல்லாம் இன்றும் கிராமத்து டீக்கடையில் இருந்து நகரத்து காபி ஷாப் வரை ஒலித்து கொண்டிருக்கிறது.பாடல்கள் இளையராஜாவிடம் கேட்டுவாங்குவதுமட்டுமின்றி நல்ல திரைக்கதை அமைப்பதிலும் வல்லவர் பாடுநிலாவே,நினைவே ஒரு சங்கீதம் போன்றவை
சிறந்த திரைக்கதைகளுக்கு உதாரணம்.இவர் விஜயகாந்தை வைத்து தர்மம் வெல்லும்
நினைவே ஒரு சங்கீதம் படங்களையும்  ராமராஜனுக்காக கிராமத்து மின்னல் போன்ற‌
படங்களையும்சிவக்குமாரை வைத்து மனிதனின் மறுபக்கம் ,உன்னை நான் சந்தித்தேன் ,நிலவு சுடுவதில்லை

உனக்காகவே வாழ்கிறேன் என வெற்றிப்படங்களாக கொடுத்தவர் இவர் கடைசியாக சரத்குமாரை வைத்து எல்லைச்சாமி என்ற படத்தை கொடுத்தார்.இப்படம் மிகப்பெரும்
தோல்விப்படம் .பிரபலமான இயக்குனராக திகழ்ந்த இவரை மீடியாக்களும் சினிமாஉலகமும்
மறந்தது ஏனோ? இது ஒரு வரலாற்றுப்பிழையாகத்தான் தோன்றுகிறது.

Sunday, 20 November 2011

அதிர்ஷ்டம் அழைத்தும் துரதிருஷ்டம் துரத்திய கலைஞர்கள்

சினிமாவில் வாய்ப்பு என்பது சாதாரண மனிதருக்கு குதிரைக்கொம்பான விஷயம் வாய்ப்புகள்
கிடைப்பதே அரிதான சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் துரதிருஷ்டத்தால் அதை இழந்தவர்களும் உண்டு அப்படிப்பட்டவர்கள் பற்றி பார்க்கவே இந்த பதிவு.

விஜயன்

80களில் வந்த படங்களில் இவர்தான் அப்போதைய படங்களின் ஹீரோ அப்போது உச்சத்தில்
இருந்த நடிகர் இவர் பின்பு ரஜினி,கமல் எழுச்சிக்குபிறகு இவர் கொஞ்சம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தேவிட்டார்.படவரவுகள் இன்றி 25வருடங்களுக்கும் மேல் கஷ்டப்பட்டார்
உதிரிப்பூக்கள் உட்பட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவருக்கே இந்த நிலைமை பார்த்துக்கொள்ளுங்கள்.சில தீயபழக்கங்களால் உடல்நிலை மோசமானது.கண்ணீர்மல்க சில‌
பத்திரிக்கைகளில் இவர் பேட்டி வெளியானது சாப்பட்டிற்க்கு கூட கஷ்டம் என்ற ரீதியில் இருந்தது இவர் பேட்டி.இதைப்பார்த்து இரக்கப்பட்ட ஏ.ஆர் முருகதாஸ் ,செல்வராகவன்
உட்பட சில இயக்குனர்கள் தங்களின் ரமணா,7ஜி ரெயின்பொகாலனி உட்பட பல படங்களில்
இவரை குணச்சித்திரவேடத்தில் நடிக்கவைத்தனர்.இவரின் குணச்சித்திரநடிப்புக்காக மீண்டும்
இவரைபடவாய்ப்பு துரத்தியது.துரதிருஷ்டம் காரணமாக மாரடைப்பால் இவர் காலமானார்.


பாண்டியன்

அண்ணே வணக்கணே என்று மதுரைத்தமிழில் கொஞ்சும் பாண்டியனை அவ்வளவு சீக்கிரம்
மறந்துவிடமுடியாது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் கடை வைத்து இருந்தவர்
நடிகர் பாண்டியன் .மண்வாசனை படத்திற்க்கு கதாநாயகனுக்கு புதுமுகநடிகர் தேடிக்கொண்டு
இருந்தபோது இயக்குனர் பாரதிராஜாவால் கண்டெடுக்கப்பட்டவர்.நல்ல நடிப்புதிறமையுள்ளவர்
ஆண்பாவம்,மண்வாசனை,ஆண்களை நம்பாதே படங்களைத்தவிர துண்டு துக்கடா வேடங்களில்தான் அதிகம் நடித்தவர்.நல்ல நடிகராக வந்துஇருக்கவேண்டியவர் சில தீயபழக்கங்களுக்கு ஆட்பட்டு கிட்னிபெய்லியரில் மரணமடைந்தார்.

லூஸ்மோகன்

பல படங்களில் காமெடியில் கலக்கியவர் லூஸ்மோகன் அவர்கள் மெட்ராஸ் பாஷை தெரியாதவர்கள் இவர் படங்களை பார்த்தால் போதும்.இவர் கடைசியாக நடித்த படம்
அழகி.பலபடங்களில் காசுபணம் சம்பாதித்த இந்த நடிகர் மகன் மருமகளின் புறக்கணிப்பால்
ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்.86வயதாகி தள்ளாடும் லூஸ்மோகன்
மகன் மீது புகார் செய்ய கமிஷனர் ஆபிசுக்கு வந்தபோதுதான் இந்த விஷயம் தெரிந்தது.

என் உயிர் தோழன் பாபு

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு  என் உயிர்தோழன் படத்தில் அறிமுகமான பாபு
அடுத்ததாக விக்ரமனின் பெரும்புள்ளி படத்தில் நடித்தார்.தொடர்ந்து தாயம்மா உட்பட‌
சில படங்களில் நடித்தவர்.ஒரு படத்தின் படப்பிடிப்பில் டூப் போடாமல் இவரே ஒரு சண்டைக்காட்சியில் மேலிருந்து குதித்தவர் குதித்தவர்தான்.படுத்த படுக்கையாக 20 வருடங்களுக்கு மேல் படுக்கையிலே எல்லாமுமாக இருந்தார் தற்போதுதான் பாபுவின்
உடல்நிலை ஓரளவிற்க்கு சீராகியுள்ளதாக கேள்வி.இவர் நடிக்க முடியாததால் தற்போது
கதைவசனம் எழுதமுயற்சி செய்கிறார் இவரின் வாழ்க்கையை  நடிகர் இயக்குனர் பொன்வண்ணன் படமாக எடுக்கபோவதாக வந்த தகவல் என்னாயிற்று எனத்தெரியவில்லை
பாபு இப்போது



உதயப்பிரகாஷ்

சின்னத்தம்பி,கட்டபொம்மன்.சின்னஜமீன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்த இவர்
சில தீயபழக்கவழக்கங்களால்மனநிலை பாதிக்கப்பட்டு சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் சுற்றி கொண்டு
இருந்ததாக ஆரம்பத்தில் சில தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பபட்டது. திடீரென‌
ஒருநாள் நடிகர் சங்கவாசலில் இறந்து கிடந்தது பார்ப்பவர்களை அதிர்ச்சிகொள்ளசெய்தது.


மோனிஷா

மலையாள நடிகையான இவர் தமிழில் அறிமுகமான உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
மூன்றாவது கண் என மளமளவென படங்களிலநடித்தார்  தமிழில் தொடர்ந்து பல வாய்ப்புகள்
தேடிவந்த நிலையில் கேரளாவில் நடந்த ஒரு சாலைவிபத்தில் மரணமடைந்தார்.



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

இன்றைக்கும் பழையபாடல்களில் தத்துவப்பாடல்கள் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியபாடல்கள்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் இவர்
எழுதியபாடல்கள் குறைவு அதற்க்கு காரணம் இவரின் வாழ்க்கை 30வயதிற்க்குள்ளேயே
முடிந்துபோனதுதான்.குறைந்த பாடல்கள் எழுதிய பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்
இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அவரின் மகிமையை தற்போது குத்துப்பாட்டு
ஆபாசப்பாட்டு எழுதும் இளையதலைமுறை கவிஞர்கள் உணரவேண்டும்


நடிகர் குட்டி

தீயவன் ஒருவன் செய்த செயலால் கால்களை இழந்த குட்டி ஒற்றைக்காலிலே நடனமாட பயிற்சி
எடுத்து டான்ஸ் ஆடி தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக இருந்தவர்.இயக்குனர் கேயாரின் ஒத்துழைப்பால் டான்ஸர் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இவரின் துரதிருஷ்டம் படம்
வந்து சில நாட்களிலே பரமகுடிக்கு ஒரு டான்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

ராமராஜன்
ஒரு காலத்தில் பலபடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் ராமராஜன் .கடுமையான குடும்பபிரச்னை மனைவியுடன்
விவாகரத்து என பல சம்பவங்கள் நடந்து .சொந்த ஊரான மேலூரில் 500ரூபாய்க்கு கூட கஷ்டப்படுகிறேன் எனப்பேட்டி
கொடுத்தவர்.நீண்ட இடைவேளைக்கு பிறகு மேதை என்ற படம் நடித்தார் அதுவும் வராத அளவுக்கு சமீபத்தில் பயங்கர‌
கார் விபத்தில் மாட்டி பிழைத்ததே பெரியவிஷயமாக போய்விட்டது.இவர் சார்ந்திருக்கும் கட்சிதான் அனைத்து மருத்துவ செலவுகளை செய்கிறது துரதிருஷ்டமும் அதிர்ஷ்டமும் மனிதர்களை எப்படியெல்லாம் துரத்துகிறது என்று
பாருங்கள்



பாரிவெங்கட்

எஸ்.வி சேகரின் நாடகங்களில் நடித்துவந்த இவர் இயக்குனர் எழிலால் துள்ளாதமனமும் துள்ளும் படத்தில் நடித்தார்
அந்த படத்தில் இவரின் காமெடி பட்டையை கிளப்ப ஓவர் நைட்டில் பாப்புலரானார்.தொடர்ந்து பல படங்களில் காமெடி
வேடத்தில் நடிக்க அடுத்தடுத்து படங்களில் புக் ஆனார்.விதிவசத்தால் திருநெல்வேலி படத்தின் ஷூட்டிங் நடித்து
முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது.இவர் வந்த பஸ் விபத்துக்குள்ளாகி இறந்தார்.

இந்த வீடியோவில் உள்ளவரே பாரிவெங்கட்